Monday, June 29, 2009

யாருக்காகப் படைக்கப்பட்டது இந்த உலகம்.

காசேதான் கடவுளடா என்கிற திரைப்படத்தில் "காசேதான் கடவுளடா... அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா" என்கிற பாடலில் வலியவன் வந்தால் இளையவன் வழி விட வேண்டும். என்று ஒரு வரி வரும். வள்ளுவர் கூட உன்னை விட வலியவனை வீழ்த்துவதே சரியான வீரம் என்றும், இளையவனை வீழ்த்துவது கோழைத்தனம் என்றும் கூறியிருப்பார்.


இங்குதான் பிரச்சனையே ஆரம்பம். இந்த உலக ஜீவாராசிகளிலேயே மனிதன் தன்னைத்தான் மிகப் பெரிய, உயர்ந்த ஜீவராசியாக நினைத்துக் கொண்டுள்ளான். இன்றைய ஹாலிவூட் திரைப்படங்களில் வருவது போன்று ஜுராசிக் பார்க், டைனோசர் போன்ற ஜீவராசிகளைக் கூட மனிதன் தன்னுடைய அறிவுக் கூர்மையால் அழித்து விடுவான். இங்கு தான் கேள்வியே பிறக்கிறது. மனிதர்களே சிந்தித்துப் பாருங்கள் இந்த உலகம் யாருக்காகப் படைக்கப்பட்டது. மனிதர்கள் வாழ்வதற்காக மட்டுமா?


இந்த வரியை மேலோட்டமாக வாசித்தால் மிகச் சாதாரணமாக தோன்றும். ஆனால் இதனை கொஞ்ச நேரம் சிந்தித்து பாருங்கள். நம் காலையே சுற்றி வரும் நாய்க்கு சோறு வைக்கக் கூட நாம் தயக்கம் காட்டுகிறோம். மழைக் காலங்களில் மறைவாய் ஒதுங்கும் நாய் உள்ளிட்ட மற்ற ஜீவராசிகளை அடித்து துரத்துகிறோம். கடவுள் (இயற்கை) மிக அழகாக உயிர் சங்கிலியை படைத்தது. அதன் படி உலகம் முழுவதும் காடுகளாலும், தண்ணீராலும் படைக்கப்பட்டது. சில ஜீவராசிகள் தண்ணீரில் மட்டுமே வாழும். சில ஜீவராசிகள் நிலத்தில் மட்டுமே வாழும். மிக சொற்பமாக ஒரு சில ஜீவராசிகள் மட்டுமே நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது.


அவை அவை அதன் அதன் இடங்களில் தான் வாழ்ந்துக் கொண்டிருந்தது. ஆனால் காம வேட்கை கொண்ட மனிதன் தனது சந்ததியை பெருக்கி, காட்டை அழித்து அங்கும் குடியேறத் தொடங்கினான். அதுவரை காட்டில் வாழ்ந்த ஜீவராசிகள் எங்கேப் போகும். அவைகள் தான் வாழ்ந்த இடத்தில்தான் இன்றும் வசிக்கிறது. ஆனால் நாம்தான் அவைகளின் இடங்களை எடுத்துக் கொண்டு அவற்றை விரட்டி அடிக்கிறோம். என்ன கொடுமை மக்களே இது. உங்கள் வீட்டில் விருந்தினராய் வரும் ஒருவர் உங்களை அடித்து விரட்டி விட்டு உங்கள் வீட்டினை, அவர் எடுத்துக் கொண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும். ஆனால் உங்களுக்கு நீதிக் கிடைக்க மனிதனால் அமைக்கபெற்ற காவல் துறை, நீதிமன்றம் என பல துறைகள் உள்ளன. ஆனால் வாய்ப் பேச முடியாத உயிரினங்கள்... அவைகளின் இடத்தை நீங்கள் எடுத்துக் கொண்டு அவைகளையே விரட்டி அடித்தால் அவை எங்கே சென்று முறையிடும்?.


இந்த உலகம் உங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டது அல்ல. இயற்கை உங்களுக்கான உணவை மட்டுமே படைக்கவில்லை. இந்த உலகம், ஈ, கொசு, காக்கா, குருவி, சிங்கம், மான், மண்புழு, பறவைகள், யானை, மீன், குதிரை என சகல உயிரினங்களுக்காகவும் தான் படைக்கப்பட்டது. ஆனால் பகுத்து அறிந்துக் கொள்ளக் கொடுக்கப்பட்ட அறிவை பிற உயிரினங்களை அடித்து வாழ மனிதன் பயன்படுத்திக் கொண்டான். உங்களுக்கான உணவை நீங்கள் உருவாக்கிக் கொள்கிறீர்கள். மற்ற உயிரினங்கள் எங்கே செல்லும். அவைகளால் தங்களுக்கான உணவை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் மனிதன் அவைகளுக்கான உணவையும் சேர்த்தே தானே பிடுங்கித் தின்று வாழ்ந்து வருகிறான். மனிதன் ஒரு சுயநலவாதி. சுயநல வியாதி. இந்த வியாதி தொற்று நோயாக அனைத்து மனிதர்களுக்கும் பரவி இன்று தன்னை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் ஏதோ தன்னை தொந்தரவு செய்ய படைக்கப்பட்டதாகவே நினைக்கிறான்.


இயற்கை அனைத்து உயிரினங்களும் சமம் என்கிறத் தொனியில் தான் படைத்தது. இங்கே வலியவன்தானே வாழ முடியும். தெருவில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று கிடக்கும் நாய்களை மனிதன் கல்லை விட்டு எறிகிறான். யார் யாரைத் துன்புறுத்துகிறார்கள்? ஒரு வெட்டுக் கிளி தன் வீட்டுக்குள் வந்து விட்டால் அதனை அடித்துக் கொன்று விட்டுதான் அடுத்த வேலைப் பார்க்கிறான். ஒரு கரப்பான் பூச்சி தன் வீட்டுக்குள் இருந்தால் மருந்து அடித்து அதனை கொன்று விடுகிறான்.


இன்றும் செய்திகளில் படிக்கிறோம். யானை நகருக்குள் வந்து அட்டகாசம் செய்கிறது. வாழைத் தோப்பை நாசம் செய்கிறது என்று. யார் யார் இடத்திற்கு வந்தது. யானைகள் நம் இடத்துக்கு வருகிறதா? அல்லது நாம் யானைகள் இருந்த காட்டை அழித்து அவைகளின் இடத்திற்கு சென்று இருக்கிறோமா? நம் தெருவில் ஒரு பாம்பு வந்து விட்டால் ஊரே திரண்டு அதனை அடித்து விரட்டுகிறோம். எங்கோ ஒரு குரங்கினை கண்டால் எல்லோரும் அதனைக் கண்டு வேடிக்கை செய்து மகிழ்கிறோம். ஒரு மாணவன் இன்னொரு மாணவனை பகடி செய்தால் நீதிமன்றம் அவனுக்கு கடுமையான தண்டனை வழங்குகிறது. ஆனால் விலங்குகளை நாம் பகடி செய்தால் நமக்கு யாரும் தண்டனை வழங்குவது இல்லை. காரணம் தண்டனை வழங்க வேண்டியப் பொறுப்பில் உள்ளவர்கள் கூட மனிதர்களே!!!


கொஞ்சம் அப்படியே மாற்றி சிந்தித்துப் பாருங்கள் மனிதர்களே.. நீங்கள் தங்கள் வீட்டில் நுழைந்து விட்டீர்கள் என ஒரு கரப்பான் பூச்சி உங்களை மருந்து அடித்துக் கொள்கிறது என்றும், யானைகள் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து மனிதன் கட்டுக்குள் புகுந்து காட்டை நாசம் செய்கிறான். அவனை யானைக் கூட்டத் தலைவர் ஓட ஓட விரட்டியடித்தார் என்றும் செய்திகள் வந்தால்??!!. கேட்க நகைச்சுவையாகத்தான் தோன்றும். ஆனால் உலகம் இப்படியும் மாறலாம் மனிதர்களே உஷார்.


இந்த உலகம் உங்களுக்காக மட்டும் படைக்கப்படவில்லை. இந்த உலகம் அனைத்து ஜீவராசிகளுக்காகவும் தான் படைக்கப்பட்டுள்ளது. மற்ற ஜீவராசிகளின் சுக வாழ்க்கையையும் சேர்த்து நீங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். காகம் கூடுக் கட்டிக் கொள்ள ஒரு மரத்தை வளர்த்து விடுங்கள். அவை ஒரு போதும் உங்களை தொந்தரவு செய்யாது.


கண்ணதாசன் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது. "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டால் எல்லாம் செவுக்கியமே" கருடன் சொன்னது. கருடன் சொன்னது உங்களுக்காகத்தான்.


உலகின் மற்ற ஜீவராசிகளையும் நேசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். இல்லை மனித இனத்தின் மறைவை எதிர்பார்த்துக் காத்திருங்கள்.

இன்னும் பேசுவோம்.


Thursday, June 11, 2009

தேர்வு முறையால் தேறாத மாணவர்கள்.



"மருத்துவ மனையில் வாந்தி எடுத்தால் நோயாளி.. வகுப்பறையில் வாந்தி எடுத்தால் படிப்பாளி" ----யாரோ ஒரு மாணவர்.

படிப்பு என்பது ஒருவனை பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தக் கூடாது. ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் படிப்பு படிப்பவனையும் அவனை சார்ந்தவர்களையும் சேர்த்தே புண்படுத்துகிறது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட கல்வி முறையில்தான் இன்றும் நாம் படித்துக் கொண்டு இருக்கிறோம். எனது தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தா, படித்த அதே கல்வி முறைதான் இன்றும் நான் படித்துக் கொண்டிருக்கிறோம். ஆங்காங்கே கொஞ்சம் மாறுதல் இருக்கலாம். ஆனால் இந்த மாறுதல்களும் கேடுகெட்ட மாறுதல்களே தவிர நல்ல மாறுதல்கள் அல்ல..


ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு நாம் சொல்லிக்கொடுப்பது எல்லாம் "நிலா நிலா ஓடிவா.. நில்லாமல் ஓடிவா.. என்பதுதான். இந்தப் பாடல் இயற்றப்பட்டு சில பல ஆண்டுகள் கடந்து போய் இருக்கும். ஆனால் இன்றைய நவீன சூழ்நிலையில் இன்னமும் அரசாங்கப் பள்ளியில் இதேப் பாட முறைதான். இந்தப் பாடல்கள் எல்லாம். பொழுதுபோக்காக கேட்க வேண்டிய பாடல்களே தவிர..படிப்புக்காக படிக்க வேண்டிய பாடல்கள் அல்ல. தெரியாத்தனமாக நமது அரசாங்கப் பள்ளியில் ஒரு பாடல் உண்டு.. "சந்திரன் வருவது எவராலே.. சூரியன் தெரிவது எவராலே.. என்கிற பாடல் அது. இந்தப் பாடலை ஒரு முறைப் பாடி பாருங்கள்.. உங்களுக்குள் ஒருவித வேகம் பிறக்கும்..ஒரு உற்சாகம் பிறக்கும்.. இந்த மாதிரியான பாடல்களை விடுத்து இன்னமும் நிலா நிலா ஓடிவா என்றால்.. மாணவன்தான் பள்ளியை விட்டு ஓடிவிடுவான்.. அரசாங்கப் பள்ளி தான் இப்படி என்றால். தனியார் பள்ளிகள் அப்படியே மேலை நாடுகளை நகல் எடுக்கும் பணியை தவிர வேறொன்றும் செய்துவிடவில்லை. "ரெயின் ரெயின் கோ அவே" வாட்டி எடுக்கும் சென்னை வெயிலில் தனியார் பள்ளி பிள்ளைகள் பாடும் பாடல்தான் இவை.. குழந்தைகள் இப்படி என்றால்.. கொஞ்சம் வயது வந்த மாணவர்கள்?.. இவர்களின் நோக்கமே தேர்வுதான்... தேர்வு என்பது மாணவர்கள் படித்ததின் அளவை தெரிந்துக் கொள்ளும் ஒரு அளவுகோல்.. அதிக முக்கியத் துவம் தரக்கூடாத ஒரு பகுதி இது.


தான் படித்ததின் அளவை தெரிந்துக் கொள்ள நடைபெற்ற தேர்வுகள் மாறி.. தேர்வுக்காகவே படிக்கிற காலம் வந்துவிட்டது. புரிகிறதோ இல்லையோ.. தேவையோ இல்லையோ.. முக்கியமான கேள்விகளை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சில பிள்ளைகள் அழகாக ஒப்பிப்பார்கள்.. எதற்காக படிக்கிறோம் என்றுக் கூட தெரியாமல் படிக்கும் அவல நிலைமை இன்று தோன்றிவிட்டது.. இதை விடக் கொடுமை வேறு இல்லை. தன் வயிறு எதற்காக வீங்கிக் கிடக்கிறது என்று தெரியாமல் தவிக்கும் ஒரு மசக்கைப் பெண்ணின் நிலை எத்தனை பரிதாபமானதோ அப்படிதான் இவர்கள் நிலையும்..இன்றைய படிப்பு நீச்சல் பயிற்சியை அஞ்சல் வழியில் படிப்பது போன்றுதான்.. "ஒரு காலத்தில் மாணவர்கள் எப்படிப் புரிந்துக் கொண்டு படித்திருப்பார்கள் என்று தெரிந்துக் கொள்ளும் விதமாகவே தேர்வு நடைபெற்றது. ஆனால் இன்று எல்லா மாணவர்களும் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் அவல நிலை இன்றையக் காலக் கட்டத்தில் உள்ளது", ஒரு நிகழ்ச்சியில் பேராசிரியர் பெரியார்தாசன் சொல்லக்கேட்டது.


மேற்சொன்ன வரிகளை கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள். அதன் கொடூரத் தன்மை உங்களுக்கு புரியும்.


மக்களே சிந்தித்துப் பாருங்கள்.


இன்றையப் படிப்பு உங்களுக்கு எண்ணக் கொடுக்கிறது. பொறியியல் மாணவர்கள் கணிப்பொறித் துறையில் நுழைந்து நல்ல சம்பளம் ஈட்டிக் கொண்டு இருந்தார்கள். காலம் மாறவே அவர்கள் நிலையும் தலைக் கீழாய் மாறிப் போனது. லகரங்களை சம்பளமாக வாங்கிய அவர்கள் வேலைப் பறிப் போகவே ஒரு சிலர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்துக்கொண்டார்கள். இக்கட்டான நேரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டியது நமது படிப்பு முறைதான். ஏன் இந்திய ஆட்சிப் பணித்துறையில் கேட்கும் கேள்விகள் மட்டும் நமக்கு விசித்திரமாக படுகிறது. உண்மையாகக் கேள்விகள் என்றாலே அப்படிதான் இருக்க வேண்டும். இது நமக்கும், நம்மை ஆளும் அரசாங்கத்திற்கும் ஏனோ புரியவில்லை. நமது மாணவர்களுக்கும் உடனடித் தேவை தேர்வு முறையை மாற்றி அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். இல்லையென்றால் நாளைய சமூகம் நல்ல மனிதர்களை இழந்து விட்டு வெறும் பைத்தியக் காரர்கள் மட்டுமே நிறைந்த சமூகமாக மாறும் அவல நிலை ஏற்படும். கல்வி கற்பது சுகமாக இருக்க வேண்டுமே தவிர.. சுமையாக இருக்கக் கூடாது.


இன்னும் பேசுவோம்...




Sunday, June 7, 2009

சிறந்த சினிமா..



திரைப்படங்கள் என்று சொன்னால் ஏதோ வேற்று மொழியில் பேசுவது போல் பலர் பார்க்கின்றனர். எனவே அவர்களுக்கு புரிந்த மொழியிலேயே, தமிழிலேயே!!? சினிமா என்றே அழைப்போம்.

முன்னோட்டம்:

இன்றைய சூழலில் பல திரைப்பட இயக்கங்கள், திரைப்பட விமர்சகர்கள் என அனைவரும் முன் வைக்கும் விஷயம். தமிழில் சிறந்த திரைப்படங்கள் உலக சினிமாக்கள் வரவில்லை என்பதே. ஒன்றும் தெரியாத கத்துக்குட்டிகள் கூட (இந்த வார்த்தை யார் மனதையும் புண்படுத்த அல்ல.) ஒரு நாலைந்து உலகப் படங்களைப் பார்த்து விட்டு இங்கு தமிழில் இது போன்ற படங்களே வரவில்லை என்று அங்கலாய்ப்பது கொஞ்சம் அதிகம் என்றே படுகிறது. 

குழந்தைகள் பற்றிய ஒரு ஈரானியப் படம். உலகப் படம் பற்றி பேசும் எல்லோருக்கும் பெயர் தெரிந்து இருக்கும். ஒரு நீளமானக் காட்சியை தவிர வேறு எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத படம். நல்ல படைப்பு. அருமையான நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, இயக்கம். உண்மைதான். என்னுடைய கேள்வி அதேப் படத்தை தமிழில் எடுத்தால் எதனை பேர் அந்தப் படத்தை போய் திரையரங்கில் பார்ப்பீர்கள். உலகப் படம் பற்றி வாய் கிழியப் பேசுபவர்கள் கூட அந்தப் படத்தை திரையரங்கில் போய் பார்க்கமாட்டார்கள். இவர்களை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்.

அது வேறொரு நாட்டுக் கலாச்சாரம். அது முழுக்க முழுக்க ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு பெண்கள் திரைப்படங்களில் நடிப்பது அரிது. அதுவும் நடிக்கும் பெண்களில் கால் தெரிந்தால் கூட அங்கே அது ஒரு குற்றம். அதனால்தான் அனைவரும் போட்டிப் போட்டுக்கொண்டு அங்கே குழந்தைகள் பற்றியப் படம் எடுக்கிறார்கள். அதே போன்றொரு முயற்சிதான் நமது கலாச்சாரம் சார்ந்து தமிழில் இப்போது ஒரு படம் வந்தது. "பசங்க" அதற்கு நீங்கள் தந்த வரவேற்பு எப்படி. வெறும் மனத் திருப்தியை வைத்துக் கொண்டு ஒரு தயாரிப்பாலனால் வாழ்ந்து விட முடியாது. விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படம் எடுங்கள். அதை நீங்கள் எதிர்பார்க்கும் விதம் எடுங்கள். முடிகிறதாப் பார்ப்போம். 

திரைப்படம் என்பது ஒரு பொழுதுப்போக்கு சாதனம். அதில் ஏதேனும் நல்லது நடந்தால் வரவேற்க வேண்டியதுதான். அதற்காக எடுக்கிறப் படங்கள் அனைத்தும் கருத்துள்ள படங்களாகத்தான் வரவேண்டும் என்றால் அனைத்து படங்களையும் பார்ப்பது யார்?

சிறந்தது எது?

இது திரைப்படத்திற்கு மட்டுமல்ல.. அனைத்துக்கும் பொருந்தும். எது சிறந்தது என்பதை யார் முடிவு செய்வது. பெரும்பாலானவர்கள் சொல்வதே சிறந்தது என்கிற முடிவுக்கே வருவோம். எது பெரும்பாண்மை? ஒரு வட்டத்தில் ஐந்து நபர்கள் உள்ளார்கள் என்றால் அதில் நான்கு அல்லது மூன்று நபர்கள் சொல்வதே சிறந்தது என்றாகலாம். மீதமுள்ள இரண்டு அல்லது ஒரு நபர் சொல்வது சிறந்தது அல்ல..  ஆனால் அந்த வட்டத்தை விட்டு வெளியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிராகரிக்கப்பட்ட அந்த ஒன்று அல்லது இரண்டு நபர்கள் சொல்வதே சிறந்தது என்று சொல்கிறார்கள் என்றால்?. இங்கே வெளியில் உள்ளவர்கள் சொல்வது யார் காதிலும் விழுவது கிடையாது. அந்த வட்டத்தில் உள்ளவர்கள் சொல்வதே அவர்களுக்கு வேத வாக்கு. 

பிறகு எப்படி அது பெரும்பாண்மை ஆகும். சிறந்தது எது என்பதை எப்படி அடையாளம் காண்பீர்கள். 

அடுத்து தமிழ் திரைப்படங்களில் வெளிவரும் பாடல்கள் பற்றி:

உலகில் வேறெந்த மொழிகளின் திரைப்படங்களிலும் பாடல்களே வெளிவராதது போன்று இங்கே உள்ளவர்கள் ஏமாற்றிக் கொண்டு திரிவார்கள். எல்லா மொழிப் படங்களிலும் பாடல்கள் உண்டு. ஆனால் இங்கே கொஞ்சம் அதிகம். காரணம் நமது சூழல். இங்கே பிறந்தாலும் பாடல், இறந்தாலும் பாடல், கல்யாணம் என்றாலும் பாடல், குழந்தை பிறந்தாலும் பாடல், எதற்கெடுத்தாலும் பாடல். ஆம் அதுதான் நமது ரத்தத்தில் கலந்த உண்மை. அது நமது சொத்து. நம்மை உற்சார்கம் ஊட்டுவது, சோர்ந்துப் போன நேரங்களில் நம்மை தூக்கிப் பிடிப்பதும் அந்தப் பாடல்களே. உலகில் அதிகம் மனநிலைப் பாதக்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் என்கிறது புள்ளிவிவரம். நூற்றுப் பத்துக் கோடி மக்கள் உள்ள தேசத்தில் மனநிலை பாதித்தவர்கள் குறைவு. ஆனால் முப்பது கோடி மக்கள் தொகை உள்ள அமெரிக்காவில் மனநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். காரணம் இதுவாகவும் இருக்கலாம். நம் மனநலத்தை பேணுவது நமது இரத்தத்தோடு கலந்தப் பாடல்களே.. பாடல்கள் இல்லாத படங்கள் எண் வர வேண்டும். நிச்சயம் பாடல்கள் வேண்டும். ஆரம்பக் காலம் முதலே அந்நிய நாட்டுக் கலாச்சாரத்தின் மோகம் கொண்டு அலையும் நம்மவர்கள் இப்போது திரைப்படங்களிலும் அந்நிய நாட்டுக் கலாச்சாரத்தையே விரும்புகின்றனர். 

மென்பொருள் துறை ஊழியர்களே இந்நாட்டுக் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று கூவும் இந்த கோழிகளுக்கு ஏன் தெரியவில்லை நாமும் அதையே தான் செய்கிறோம் என்று. அணியும் ஆடைகளில் கலாச்சார சீர்க்ட்டை எதிர்க்கும் இவர்கள் எப்படி திரைப்படங்களில் மட்டும் அந்நிய கலாச்சாரத்தை வரவேற்கிறார்கள்.

அதுவும் ஒரு சில மேதைகள் பேசும்போது "அகிரா குரசோவா... ஐசன்ஸ்டீன்.. ஆகியோரைப் பாருங்கள்.. இங்கே பாருங்கள்..என்று உரக்கக் கூவிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் ஏன் அவர்களைப் பார்க்க வேண்டும். அவரால் நமைப் பார்க்கட்டுமே.. செண்டிமெண்ட், காதல், சோகம், போன்றவையெல்லாம் இந்த தேசத்து மக்கள் ரத்தத்தில் கலந்துப் போன ஒன்று. அதற்கு ஏற்றாற்போல்தான் இங்கே படங்கள் தயாரிக்க முடியும். அதையும் தாண்டி உலகப் படங்கள், அகிரா.... என்று பேசுபவர்கள் அந்த நாட்டுக்கே சென்று தங்கிவிடுங்கள். இந்த தேசம் உங்களுக்கு நன்றி சொல்லும்.

விமர்சனம் என்பது விளக்கைப் பிடிப்பது போன்று. எங்கே எப்படி பிடிக்கிறோம் என்பது முக்கியம். இருந்தப் பக்கங்களில் விளக்கைப் பிடித்து அடுத்த முறை அந்த தவறுகள் நேராமல் செய்வதே விமர்சகர்கள் கடமை. அதை விடுத்து விளக்கை தூக்கி எரிந்து அவர்களை உயிரோடு கொளுத்துவதல்ல விமர்சனம்.. 

உங்களுக்கான ஒரு கூட்டம் சேர்ந்தால் அதை நல்ல விசயங்களுக்கு பயன்படுத்துங்கள்... தவிர்த்து உங்களை முன்னிலை படுத்த ஒன்றும் தெரியாத அப்பாவிகளை பகடைக் காயாக பயன்படுத்தாதீர்கள்.. 

மீண்டும் பேசுவோம்.