Monday, June 29, 2009

யாருக்காகப் படைக்கப்பட்டது இந்த உலகம்.

காசேதான் கடவுளடா என்கிற திரைப்படத்தில் "காசேதான் கடவுளடா... அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா" என்கிற பாடலில் வலியவன் வந்தால் இளையவன் வழி விட வேண்டும். என்று ஒரு வரி வரும். வள்ளுவர் கூட உன்னை விட வலியவனை வீழ்த்துவதே சரியான வீரம் என்றும், இளையவனை வீழ்த்துவது கோழைத்தனம் என்றும் கூறியிருப்பார்.


இங்குதான் பிரச்சனையே ஆரம்பம். இந்த உலக ஜீவாராசிகளிலேயே மனிதன் தன்னைத்தான் மிகப் பெரிய, உயர்ந்த ஜீவராசியாக நினைத்துக் கொண்டுள்ளான். இன்றைய ஹாலிவூட் திரைப்படங்களில் வருவது போன்று ஜுராசிக் பார்க், டைனோசர் போன்ற ஜீவராசிகளைக் கூட மனிதன் தன்னுடைய அறிவுக் கூர்மையால் அழித்து விடுவான். இங்கு தான் கேள்வியே பிறக்கிறது. மனிதர்களே சிந்தித்துப் பாருங்கள் இந்த உலகம் யாருக்காகப் படைக்கப்பட்டது. மனிதர்கள் வாழ்வதற்காக மட்டுமா?


இந்த வரியை மேலோட்டமாக வாசித்தால் மிகச் சாதாரணமாக தோன்றும். ஆனால் இதனை கொஞ்ச நேரம் சிந்தித்து பாருங்கள். நம் காலையே சுற்றி வரும் நாய்க்கு சோறு வைக்கக் கூட நாம் தயக்கம் காட்டுகிறோம். மழைக் காலங்களில் மறைவாய் ஒதுங்கும் நாய் உள்ளிட்ட மற்ற ஜீவராசிகளை அடித்து துரத்துகிறோம். கடவுள் (இயற்கை) மிக அழகாக உயிர் சங்கிலியை படைத்தது. அதன் படி உலகம் முழுவதும் காடுகளாலும், தண்ணீராலும் படைக்கப்பட்டது. சில ஜீவராசிகள் தண்ணீரில் மட்டுமே வாழும். சில ஜீவராசிகள் நிலத்தில் மட்டுமே வாழும். மிக சொற்பமாக ஒரு சில ஜீவராசிகள் மட்டுமே நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது.


அவை அவை அதன் அதன் இடங்களில் தான் வாழ்ந்துக் கொண்டிருந்தது. ஆனால் காம வேட்கை கொண்ட மனிதன் தனது சந்ததியை பெருக்கி, காட்டை அழித்து அங்கும் குடியேறத் தொடங்கினான். அதுவரை காட்டில் வாழ்ந்த ஜீவராசிகள் எங்கேப் போகும். அவைகள் தான் வாழ்ந்த இடத்தில்தான் இன்றும் வசிக்கிறது. ஆனால் நாம்தான் அவைகளின் இடங்களை எடுத்துக் கொண்டு அவற்றை விரட்டி அடிக்கிறோம். என்ன கொடுமை மக்களே இது. உங்கள் வீட்டில் விருந்தினராய் வரும் ஒருவர் உங்களை அடித்து விரட்டி விட்டு உங்கள் வீட்டினை, அவர் எடுத்துக் கொண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும். ஆனால் உங்களுக்கு நீதிக் கிடைக்க மனிதனால் அமைக்கபெற்ற காவல் துறை, நீதிமன்றம் என பல துறைகள் உள்ளன. ஆனால் வாய்ப் பேச முடியாத உயிரினங்கள்... அவைகளின் இடத்தை நீங்கள் எடுத்துக் கொண்டு அவைகளையே விரட்டி அடித்தால் அவை எங்கே சென்று முறையிடும்?.


இந்த உலகம் உங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டது அல்ல. இயற்கை உங்களுக்கான உணவை மட்டுமே படைக்கவில்லை. இந்த உலகம், ஈ, கொசு, காக்கா, குருவி, சிங்கம், மான், மண்புழு, பறவைகள், யானை, மீன், குதிரை என சகல உயிரினங்களுக்காகவும் தான் படைக்கப்பட்டது. ஆனால் பகுத்து அறிந்துக் கொள்ளக் கொடுக்கப்பட்ட அறிவை பிற உயிரினங்களை அடித்து வாழ மனிதன் பயன்படுத்திக் கொண்டான். உங்களுக்கான உணவை நீங்கள் உருவாக்கிக் கொள்கிறீர்கள். மற்ற உயிரினங்கள் எங்கே செல்லும். அவைகளால் தங்களுக்கான உணவை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் மனிதன் அவைகளுக்கான உணவையும் சேர்த்தே தானே பிடுங்கித் தின்று வாழ்ந்து வருகிறான். மனிதன் ஒரு சுயநலவாதி. சுயநல வியாதி. இந்த வியாதி தொற்று நோயாக அனைத்து மனிதர்களுக்கும் பரவி இன்று தன்னை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் ஏதோ தன்னை தொந்தரவு செய்ய படைக்கப்பட்டதாகவே நினைக்கிறான்.


இயற்கை அனைத்து உயிரினங்களும் சமம் என்கிறத் தொனியில் தான் படைத்தது. இங்கே வலியவன்தானே வாழ முடியும். தெருவில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று கிடக்கும் நாய்களை மனிதன் கல்லை விட்டு எறிகிறான். யார் யாரைத் துன்புறுத்துகிறார்கள்? ஒரு வெட்டுக் கிளி தன் வீட்டுக்குள் வந்து விட்டால் அதனை அடித்துக் கொன்று விட்டுதான் அடுத்த வேலைப் பார்க்கிறான். ஒரு கரப்பான் பூச்சி தன் வீட்டுக்குள் இருந்தால் மருந்து அடித்து அதனை கொன்று விடுகிறான்.


இன்றும் செய்திகளில் படிக்கிறோம். யானை நகருக்குள் வந்து அட்டகாசம் செய்கிறது. வாழைத் தோப்பை நாசம் செய்கிறது என்று. யார் யார் இடத்திற்கு வந்தது. யானைகள் நம் இடத்துக்கு வருகிறதா? அல்லது நாம் யானைகள் இருந்த காட்டை அழித்து அவைகளின் இடத்திற்கு சென்று இருக்கிறோமா? நம் தெருவில் ஒரு பாம்பு வந்து விட்டால் ஊரே திரண்டு அதனை அடித்து விரட்டுகிறோம். எங்கோ ஒரு குரங்கினை கண்டால் எல்லோரும் அதனைக் கண்டு வேடிக்கை செய்து மகிழ்கிறோம். ஒரு மாணவன் இன்னொரு மாணவனை பகடி செய்தால் நீதிமன்றம் அவனுக்கு கடுமையான தண்டனை வழங்குகிறது. ஆனால் விலங்குகளை நாம் பகடி செய்தால் நமக்கு யாரும் தண்டனை வழங்குவது இல்லை. காரணம் தண்டனை வழங்க வேண்டியப் பொறுப்பில் உள்ளவர்கள் கூட மனிதர்களே!!!


கொஞ்சம் அப்படியே மாற்றி சிந்தித்துப் பாருங்கள் மனிதர்களே.. நீங்கள் தங்கள் வீட்டில் நுழைந்து விட்டீர்கள் என ஒரு கரப்பான் பூச்சி உங்களை மருந்து அடித்துக் கொள்கிறது என்றும், யானைகள் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து மனிதன் கட்டுக்குள் புகுந்து காட்டை நாசம் செய்கிறான். அவனை யானைக் கூட்டத் தலைவர் ஓட ஓட விரட்டியடித்தார் என்றும் செய்திகள் வந்தால்??!!. கேட்க நகைச்சுவையாகத்தான் தோன்றும். ஆனால் உலகம் இப்படியும் மாறலாம் மனிதர்களே உஷார்.


இந்த உலகம் உங்களுக்காக மட்டும் படைக்கப்படவில்லை. இந்த உலகம் அனைத்து ஜீவராசிகளுக்காகவும் தான் படைக்கப்பட்டுள்ளது. மற்ற ஜீவராசிகளின் சுக வாழ்க்கையையும் சேர்த்து நீங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். காகம் கூடுக் கட்டிக் கொள்ள ஒரு மரத்தை வளர்த்து விடுங்கள். அவை ஒரு போதும் உங்களை தொந்தரவு செய்யாது.


கண்ணதாசன் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது. "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டால் எல்லாம் செவுக்கியமே" கருடன் சொன்னது. கருடன் சொன்னது உங்களுக்காகத்தான்.


உலகின் மற்ற ஜீவராசிகளையும் நேசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். இல்லை மனித இனத்தின் மறைவை எதிர்பார்த்துக் காத்திருங்கள்.

இன்னும் பேசுவோம்.


No comments:

Post a Comment