Thursday, June 11, 2009

தேர்வு முறையால் தேறாத மாணவர்கள்.



"மருத்துவ மனையில் வாந்தி எடுத்தால் நோயாளி.. வகுப்பறையில் வாந்தி எடுத்தால் படிப்பாளி" ----யாரோ ஒரு மாணவர்.

படிப்பு என்பது ஒருவனை பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தக் கூடாது. ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் படிப்பு படிப்பவனையும் அவனை சார்ந்தவர்களையும் சேர்த்தே புண்படுத்துகிறது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட கல்வி முறையில்தான் இன்றும் நாம் படித்துக் கொண்டு இருக்கிறோம். எனது தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தா, படித்த அதே கல்வி முறைதான் இன்றும் நான் படித்துக் கொண்டிருக்கிறோம். ஆங்காங்கே கொஞ்சம் மாறுதல் இருக்கலாம். ஆனால் இந்த மாறுதல்களும் கேடுகெட்ட மாறுதல்களே தவிர நல்ல மாறுதல்கள் அல்ல..


ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு நாம் சொல்லிக்கொடுப்பது எல்லாம் "நிலா நிலா ஓடிவா.. நில்லாமல் ஓடிவா.. என்பதுதான். இந்தப் பாடல் இயற்றப்பட்டு சில பல ஆண்டுகள் கடந்து போய் இருக்கும். ஆனால் இன்றைய நவீன சூழ்நிலையில் இன்னமும் அரசாங்கப் பள்ளியில் இதேப் பாட முறைதான். இந்தப் பாடல்கள் எல்லாம். பொழுதுபோக்காக கேட்க வேண்டிய பாடல்களே தவிர..படிப்புக்காக படிக்க வேண்டிய பாடல்கள் அல்ல. தெரியாத்தனமாக நமது அரசாங்கப் பள்ளியில் ஒரு பாடல் உண்டு.. "சந்திரன் வருவது எவராலே.. சூரியன் தெரிவது எவராலே.. என்கிற பாடல் அது. இந்தப் பாடலை ஒரு முறைப் பாடி பாருங்கள்.. உங்களுக்குள் ஒருவித வேகம் பிறக்கும்..ஒரு உற்சாகம் பிறக்கும்.. இந்த மாதிரியான பாடல்களை விடுத்து இன்னமும் நிலா நிலா ஓடிவா என்றால்.. மாணவன்தான் பள்ளியை விட்டு ஓடிவிடுவான்.. அரசாங்கப் பள்ளி தான் இப்படி என்றால். தனியார் பள்ளிகள் அப்படியே மேலை நாடுகளை நகல் எடுக்கும் பணியை தவிர வேறொன்றும் செய்துவிடவில்லை. "ரெயின் ரெயின் கோ அவே" வாட்டி எடுக்கும் சென்னை வெயிலில் தனியார் பள்ளி பிள்ளைகள் பாடும் பாடல்தான் இவை.. குழந்தைகள் இப்படி என்றால்.. கொஞ்சம் வயது வந்த மாணவர்கள்?.. இவர்களின் நோக்கமே தேர்வுதான்... தேர்வு என்பது மாணவர்கள் படித்ததின் அளவை தெரிந்துக் கொள்ளும் ஒரு அளவுகோல்.. அதிக முக்கியத் துவம் தரக்கூடாத ஒரு பகுதி இது.


தான் படித்ததின் அளவை தெரிந்துக் கொள்ள நடைபெற்ற தேர்வுகள் மாறி.. தேர்வுக்காகவே படிக்கிற காலம் வந்துவிட்டது. புரிகிறதோ இல்லையோ.. தேவையோ இல்லையோ.. முக்கியமான கேள்விகளை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சில பிள்ளைகள் அழகாக ஒப்பிப்பார்கள்.. எதற்காக படிக்கிறோம் என்றுக் கூட தெரியாமல் படிக்கும் அவல நிலைமை இன்று தோன்றிவிட்டது.. இதை விடக் கொடுமை வேறு இல்லை. தன் வயிறு எதற்காக வீங்கிக் கிடக்கிறது என்று தெரியாமல் தவிக்கும் ஒரு மசக்கைப் பெண்ணின் நிலை எத்தனை பரிதாபமானதோ அப்படிதான் இவர்கள் நிலையும்..இன்றைய படிப்பு நீச்சல் பயிற்சியை அஞ்சல் வழியில் படிப்பது போன்றுதான்.. "ஒரு காலத்தில் மாணவர்கள் எப்படிப் புரிந்துக் கொண்டு படித்திருப்பார்கள் என்று தெரிந்துக் கொள்ளும் விதமாகவே தேர்வு நடைபெற்றது. ஆனால் இன்று எல்லா மாணவர்களும் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் அவல நிலை இன்றையக் காலக் கட்டத்தில் உள்ளது", ஒரு நிகழ்ச்சியில் பேராசிரியர் பெரியார்தாசன் சொல்லக்கேட்டது.


மேற்சொன்ன வரிகளை கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள். அதன் கொடூரத் தன்மை உங்களுக்கு புரியும்.


மக்களே சிந்தித்துப் பாருங்கள்.


இன்றையப் படிப்பு உங்களுக்கு எண்ணக் கொடுக்கிறது. பொறியியல் மாணவர்கள் கணிப்பொறித் துறையில் நுழைந்து நல்ல சம்பளம் ஈட்டிக் கொண்டு இருந்தார்கள். காலம் மாறவே அவர்கள் நிலையும் தலைக் கீழாய் மாறிப் போனது. லகரங்களை சம்பளமாக வாங்கிய அவர்கள் வேலைப் பறிப் போகவே ஒரு சிலர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்துக்கொண்டார்கள். இக்கட்டான நேரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டியது நமது படிப்பு முறைதான். ஏன் இந்திய ஆட்சிப் பணித்துறையில் கேட்கும் கேள்விகள் மட்டும் நமக்கு விசித்திரமாக படுகிறது. உண்மையாகக் கேள்விகள் என்றாலே அப்படிதான் இருக்க வேண்டும். இது நமக்கும், நம்மை ஆளும் அரசாங்கத்திற்கும் ஏனோ புரியவில்லை. நமது மாணவர்களுக்கும் உடனடித் தேவை தேர்வு முறையை மாற்றி அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். இல்லையென்றால் நாளைய சமூகம் நல்ல மனிதர்களை இழந்து விட்டு வெறும் பைத்தியக் காரர்கள் மட்டுமே நிறைந்த சமூகமாக மாறும் அவல நிலை ஏற்படும். கல்வி கற்பது சுகமாக இருக்க வேண்டுமே தவிர.. சுமையாக இருக்கக் கூடாது.


இன்னும் பேசுவோம்...




3 comments: